தூத்துக்குடி அருகே சூறாவளி காற்று விமான நிலைய கூரை விழுந்தது
தூத்துக்குடியில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் டோல்கேட் மேற்கூரை, விமான நிலையத்தில் போடப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரை பறந்து வந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென அதி வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. அப்போது அருகேயுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்காகத் தற்காலிகமாக போடப்பட்டிருந்த தகர மேற்கூரைகள், மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி சாலை சுங்கச்சாவடி மேற்கூரை காற்றின் வேகம் தாங்காமல் பெயர்ந்து காற்றில் பறந்து வந்தன. விமான நிலையத்தில் ‘பீடவுன்’ பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விமான நிலையத்தில் போடப் பட்டிருந்த மேற்கூரை விழுந்து விபத்தை ஏற்படுத்தின.
இந்த விபத்தில் வடக்கு காலாங்கரையைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் மோகன்குமார், காலாங்கரையைச் சேர்ந்த முனியசாமி மகன் ஐயப்பன் உள்ளிட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா தருவை எம்எஸ்பி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி ஆறுமுகத்தாய், அவரது மகள் ஆகாஷினி மற்றும் நெட்டூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ, அவரது மனைவி விரோனிகா ஆகியோரும் இவ்விபத்தில் சிக்கிக் காயமடைந்துள்ளனர்.
தற்போது அவர்கள் 6 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
