செய்திகள்அண்மை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பூங்கா! மேயர் ஜெகன் அசத்தல் அறிவிப்பு!

Share the news
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பூங்கா அமைக்கப்படும்! மாமன்றத்தின் மாண்புக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை பாயும்- மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் 29.06.26 அன்று நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது; தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும், பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றியும், சிறந்த மாநகராட்சியாக செயல்படுவதற்கும் உதவிய மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.

கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கான சவால்களை எதிர்கொள்ளவும், தூய்மையான நெருக்கடிகள் இல்லாத நடைபாதை, சைக்கிள் பாதையுடன் கூடிய, தெருக்கள் கொண்ட நகரமாக தூத்துக்குடியை மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கொள்கை வழிகாட்டுதலை மேயர் வெளியிட்டார். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் இருக்கை விவகாரம் தொடர்பாக அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வென்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வென்ற ராமரும் அண்மையில் தவெகவில் இணைந்தனர். இன்று கூட்ட அரங்கிற்கு வந்த மந்திரமூர்த்தி மற்றும் ராமர், தாங்கள் முன்பு அமர்ந்த அதே முன்வரிசை இருக்கையில் அமர அனுமதிக்குமாறு மேயரிடம் கோரினர். அதற்குப் பதிலளித்த மேயர் ஜெகன், “அதிமுகவின் அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் மந்திரமூர்த்தி கொறடா பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 57வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த இடம் ஜெயலெட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. மந்திரமூர்த்தி பழைய இடத்தில் அமர முடியாது” என்றும், கடந்த நான்கரை ஆண்டு காலம் இந்த மாமன்றத்தின் மாண்பு குறையாமல் சிறப்பாக நடத்தி வருகிறோம் மக்கள் சேவைக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மேலும் மாநகராட்சி சார்பில் 53 பூங்காக்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு இயங்கி வருகிறது இதில் மூன்று மகளிர் பிங் பூங்காக்களும் அடங்கும். அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோகமாக புதிய பூங்கா ஒன்றை அமைப்பதற்கு ஆரம்ப கட்ட பணி தொடங்கவுள்ளது. வரும் மழைக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டத்தில் 32 வது வார்டு திமுக கவுன்சிலர் கந்தசாமி பேசுகையில்; கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அன்றைய அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் அண்ணா நகர் 1 மற்றும் 2 வது தெருவில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி அவர்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியது திமுக அரசு. அதேபோல் அண்ணாநகர் 3 வது தெருவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க ஏதுவாக மாநகராட்சியின் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என கவுன்சிலர் கந்தசாமி கோரிக்கை வைத்தார்.
கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, குழு தலைவர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கீதா முருகேசன், கனகராஜ், இசக்கிராஜா, ரெங்கசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன