செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை, தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் துணிகரம். 3 பேர் கைது!

Share the news

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில், மூதாட்டி ஒருவரைத் தாக்கி தங்க நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நரிப்பையூர் வடக்கு மறவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (86). இவரது கணவர் இறந்து விட்டார். இந் நிலையில், மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து அவர் வீட்டிற்கு வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மதியம் சுமார் 2:00 மணி அளவில் மாரியம்மாளின் வீட்டிற்கு வந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளிட்ட மூவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களை நம்பி வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்ற மூதாட்டியைப் பின்தொடர்ந்த கும்பல், திடீரென அவர் கண்கள் மற்றும் முகத்தில் மிளகாய்ப்பொடி ஸ்பிரே அடித்துள்ளனர். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த மூதாட்டியை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாரியம்மாள் மயக்கமடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் அங்க மோதிரம் கமல்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு கொள்ளை கும்பல் தப்பித்து ஓடியது.

இக் கொள்ளைச் சம்பவம் குறித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி பகுதி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, தாளமுத்து நகரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி மற்றும் அவர்களது நண்பரான கர்ணன் (25) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த 17 வயது மாணவியின் பாட்டி வீடு நரிப்பையூரில் இருப்பதால், அவர் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது தனியாக வசிக்கும் மூதாட்டி மாரியம்மாளை நோட்டமிட்டு, தனது நண்பர்களுடன் இணைந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவிகள் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன