வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் அதிக கவனத்துடன் செயல்பட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாக இரண்டு தினங்களே உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) பெரும்பாலும் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. கணிப்புகள் மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்புள்ளதாகக் கூறினாலும், அதிமுகவும் கணிசமான இடங்களைப் பிடிக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் ஒருசில தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்; ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் பதிவான வாக்குகள் குறித்து நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 4-ஆம் தேதி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் எவ்விதத் தொய்வுமின்றிச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு சுற்றையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எவ்விதக் குளறுபடிகளுக்கும் இடமளிக்கக் கூடாது. நமது பார்வையில் இருந்து எந்தவொரு சிறு நிகழ்வும் தப்பகூடாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் இப்பொழுதே சூடுபிடித்துள்ளது.
