செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

பாஞ்சை வீரசக்கதேவி ஆலய 70வது ஆண்டு திருவிழா மே 8ல் நடைபெறுகிறது

Share the news

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 70-வது ஆண்டு திருவிழாவுக்கான கால்நாட்டு விழா மே 1 இன்று காலை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா, இந்த ஆண்டு வருகிற மே மாதம் 8, 9 மற்றும் 10-ம் தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் ஆலயத்தில் பூஜைகள் செய்யப்பட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆலயக் குழுத் தலைவர் குளத்தூர் மாஜி ஜமீன்தார் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஆதிசங்கர், பொருளார் வரதராஜப்பெருமாள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வருகிற மே மாதம் 8, 9, 10-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீரக் கலைகளும், நையாண்டி மேளம், பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்குகளும் நடைபெறும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று நாடகம், இன்னிசைக் கச்சேரி நடைபெறும். மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் ‘நினைவு ஜோதி’ தொடர் ஓட்டம் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடையும்.
இவ்விழாவில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, மற்றும் தேனி மாவட்டங்கள் உட்பட தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன