தூத்துக்குடிக்கு வந்தே பாரத் மத்திய அமைச்சரிடம் பாஜக மனு
தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவாக தொடங்கவும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் தரம் உயர்த்தவும் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும், விண்வெளி பூங்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் என்றும், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்பு பணிகளுக்காக அவற்றை திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதிகள் உள்ளதால் அங்கு பிட் லைன் அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கும் வாய்ப்பு உருவாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு, சென்னை – திருச்செந்தூர் இடையே புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவாக தொடங்கவும், தற்போது திருநெல்வேலி – மும்பை இடையே இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம், சுற்றுலா மேம்பாடு மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், செல்வராஜ் மாவட்ட துணை தலைவர் சிவராமன் திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வ குமரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
