MLA அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, காங் மாவட்ட தலைவர் பெருமாள்சாமி எச்சரிக்கை
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அடைந்த படுதோல்வியின் காரணமாக, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் தனது அரசியல் நிதானத்தை இழந்து, விரக்தியான நிலையில் பொது மேடைகளில் தரம்தாழ்ந்து பேசி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியினரை ‘துரோகிகள்’ என்று நா கூசாமல் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் தொட்டே, மத்தியில் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்துவிட்டு, காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தி.மு.க. செய்த துரோகங்கள் என்னென்ன என்பது தமிழகத்திற்கு நன்றாகத் தெரியும். இத்தகைய தி.மு.க.வின் தரம் தாழ்ந்த பேச்சுகளும், தலைவர்களின் அகங்காரமும் தற்பொழுது திமுக இயக்கம் தமிழகத்தில் முழுமையாக அழிந்து வர காரணமாக அமைந்துள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைத் திட்டமிட்டுத் தோற்கடிப்பதற்காக, அ.தி.மு.க.வினருடன் கைகோர்த்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை டெல்லிக்கு தூது அனுப்பி, காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி நின்றது இதே தி.மு.க.தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
தென் மாநிலங்கள் முழுவதும் தற்பொழுது காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இன்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய சூழலில், ‘தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் கரியை பூசுவோம்’ என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பொது மேடையில் தரம்தாழ்ந்து பேசியுள்ளார்.
எங்கள் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றித் தரக்குறைவாகப் பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை. இதோடு அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் அவர் எல்லையை மீறிப் பேசினால், அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் அவர் மீது ‘கருப்பு மை’ வீசிப் போராட்டங்களை நடத்துவோம்” என பெருமாள்சாமி எச்சரித்தார். இந்த அரசியல் மோதல்கள் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
