தூத்துக்குடி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பணியை துவக்கிய ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஸ்ரீநாத் தொகுதி மக்களின் குறைதீர்க்கும் பணிகளை முறைப்படி இன்று தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீநாத் எம்.எல்.ஏ., பேசுகையில்;
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து நேரில் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன்.
தூத்துக்குடி தொகுதியில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை முற்றிலுமாக மூடுவதற்குத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பிரச்சினையான பக்கிள் ஓடை சீரமைக்கப்படும். ஓடையில் கழிவுநீர் மற்றும் ஆலைகளின் கழிவுநீர் எவ்விதச் சுத்திகரிப்பும் இன்றி நேரடியாகக் கடலில் கலந்து கடல் வளமும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவது குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, நிரந்தரத் தீர்வு காணப்படும்.
தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் மக்கள் நலன் சார்ந்த நேர்மையான நிர்வாகம் மட்டுமே நடைபெறும். தமிழக முதல்வர் மற்றும் தவெக பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வியாபாரிகளிடமோ கலெக்ஷன், கரப்ஷன் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் யாராக எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என ஸ்ரீநாத் எம்.எல்.ஏ., எச்சரித்தார்.
இந்நிகழ்ச்சியில் தவெக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாம்ராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, தவெக நிர்வாகிகள், உடனிருந்தனர்.
